பத்திரப்பதிவுத்துறையில் அதிரடி மாற்றங்கள்..! புதிய அறிவிப்புகள் வெளியீடு
சென்னை: பொதுமக்களுக்கு பத்திரப்பதிவு சேவைகளை மேலும் எளிமையாக்கும் வகையில், பத்திரப்பதிவுத்துறையில் பல்வேறு புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக ஆவணப் பதிவுகள் நடைபெறும் சார்பதிவாளர் அலுவலகங்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் சார்பதிவக எண்கள் மறுசீரமைக்கப்படுவதுடன், அதிக பணிச்சுமை உள்ள அலுவலகங்களுக்கு கூடுதல் பணியாளர்கள், கணினிகள் மற்றும் ஸ்கேனர்கள் வழங்கப்பட உள்ளன.
மேலும், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதையும் அலுவலகங்களில் ஏற்படும் இடநெருக்கடியையும் குறைக்கும் வகையில் 25 “மாதிரி பதிவு மையங்கள் (MRHs)” நிறுவப்பட உள்ளன.
STAR மென்பொருளில் புதிய தொழில்நுட்ப மேம்பாடுகள்
பத்திரப்பதிவுத்துறையின் STAR 2.0/3.0 மென்பொருள், IIT-Madras தொழில்நுட்ப ஆலோசனையுடன் மேம்படுத்தப்பட உள்ளது. மேலும், API தொழில்நுட்பத்தின் மூலம் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை நிகழ்நேரத்தில் சரிபார்த்து, போலி ஆவணப் பதிவுகளைத் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
“நேரடி வருகை இல்லா ஆவணப்பதிவு முறை” செயல்படுத்தப்பட்டு, 24/7 இணையவழி முன்பதிவு வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையவழியில் பதிவு செய்து, புகைப்படம் மற்றும் கைரேகை உள்ளிட்ட விவரங்களுடன் காகிதமில்லா பதிவு வசதியும் கொண்டு வரப்பட உள்ளது.
மேலும், 2018ஆம் ஆண்டு முதல் பதிவான ஆவணங்களின் நகல்களை இணையவழியாக உடனடியாகப் பெறும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
நிலப்பதிவுகளில் மோசடிக்கு முற்றுப்புள்ளி
இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமான நிலங்களின் பதிவுகளை STAR மென்பொருளில் நேரடியாக உள்ளீடு செய்து, அவற்றில் மோசடி பத்திரப்பதிவுகள் நடைபெறுவதைத் தடுக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளது.
மாநிலம் முழுவதும் பதிவு செய்யப்படும் ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக ரூ.1.50 கோடி மதிப்பில் தரவு பகுப்பாய்வு மையம் அமைக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பதிவுத்துறை உயர் அலுவலர்களின் திறன் மற்றும் தலைமைப் பண்புகளை மேம்படுத்தும் வகையில், பதிவுத்துறை பயிற்சிக்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பத்திரப்பதிவு சேவைகளை நவீனமயமாக்கி, பொதுமக்களின் காத்திருப்பு நேரத்தை குறைத்து, வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதுடன், போலி ஆவணங்கள் மற்றும் மோசடி பதிவுகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட உள்ளன.
தமிழக வெற்றிக்குரல்