பேரணாம்பட்டில் 65 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்..! ஒருவர் கைது.

வேலூர்:

பேரணாம்பட்டு பஜார் வீதியில் உள்ள மளிகைக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

பேரணாம்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் பிரபு, சிறப்பு உதவி ஆய்வாளர் கோபிநாத், தலைமை காவலர் பவுல் உள்ளிட்ட போலீசார் சம்பந்தப்பட்ட மளிகைக் கடையில் சோதனை நடத்தினர்.

அப்போது கடையில் ஹான்ஸ், கூலிப் பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சுமார் 65 கிலோ பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், பேரணாம்பட்டு ஆதாம்ஷா வீதியைச் சேர்ந்த சகோதரர்கள் இந்த புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து சபிக் அஹ்மது (34) என்பவரை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் அவரது சகோதரர் ஷகில் அஹ்மது தலைமறைவாக இருப்பதாகவும், அவரை போலீசார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரணாம்பட்டு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனை மற்றும் பதுக்கலைத் தடுக்கும் வகையில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply