பள்ளிக் கல்வித்துறையில் முறைகேடு புகார்கள்: அனைத்து விவகாரங்களிலும் விசாரணை நடத்தப்படும்! அமைச்சர் நிர்மல் குமார்.

கோவை:

பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ஆதாரங்களின் அடிப்படையில் அனைத்து விவகாரங்களிலும் உரிய விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தயக்கமின்றி முன்வந்து புகார் அளிக்கலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பள்ளிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் ரூ.400 கோடி வரை வசூலிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறை மட்டுமின்றி, பிற துறைகளிலும் தவறுகள் நடந்திருந்தால் அவை அனைத்தும் உரிய விதிமுறைகளின்படி விசாரிக்கப்படும் என்றார்.

மக்களின் பணம் கட்சி நிதி என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், யாரையும் பழிவாங்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.

கரூரில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், செந்தில் பாலாஜி மற்றும் அன்பில் மகேஷ் ஆதரவாளர்கள் தொடர்புடையதாகக் கூறப்படும் விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான கோப்பும் விசாரணையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், எங்கு தவறு நடந்திருந்தாலும் ஆதாரங்களைச் சேகரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

கோவையில் அகிலன் தொடர்பான விவகாரத்தில் அமைச்சரின் நிர்பந்தம் இருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், விசாரணை தெளிவாக நடைபெற்று வருவதாகக் கூறினார். காவல்துறை ஐ.ஜி. அறிக்கையில் விவரங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த அவர், தவறு செய்தவர்கள் மீது எவ்விதத் தலையீடுமின்றி விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார்.

மின்சார விநியோகப் பிரச்சினை குறித்து விளக்கம்

மின்சாரத் தட்டுப்பாடு தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், குறிப்பிட்ட இடத்தில் மின்சார விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பு, மின் கேபிளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இருந்ததாக விளக்கமளித்தார். நகராட்சி எல்லைக்குட்பட்ட மீட்டர் வரையில் மின்சாரம் வழங்கப்பட்டிருந்ததாகவும், அதற்குப் பின்னர் உள்ள மின்கம்பியில் ஏற்பட்ட கோளாறைச் சரிசெய்ய நேரம் எடுத்துக்கொண்டதால் ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தலைமைச் செயலகத்திலும் இதுபோன்ற மின்சாரப் பிரச்சினை ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், சம்பவத்தின் முழு விவரங்களையும் அறிந்த பின்னரே அதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்றார்.

ஒரு லட்சம் சூரிய மின்சக்தி அமைப்புகள் நிறுவ இலக்கு

மேற்கூரை சூரிய மின்சக்தி மற்றும் வீடுகளுக்கான சூரிய மின்சக்தித் திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெறுவதாக அமைச்சர் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் மாதம் வரை 85 ஆயிரம் மேற்கூரை சூரிய மின்சக்தி அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதாகவும், மொத்தம் ஒரு லட்சம் அமைப்புகளை நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் தொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மேலும் 4,000 வீடுகளுக்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். நீண்டகால ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

தமிழகம் மின்மிகை மாநிலமா? அமைச்சர் விளக்கம்

தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர் நிர்மல் குமார், மத்தியத் தொகுப்பிலிருந்து மின்சாரம் வாங்கப்படுவதையும், மாநிலத்தின் சொந்த மின் உற்பத்தியையும் தனித்தனியாகக் கணக்கிட வேண்டும் என்றார்.

கடந்த ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலம் எனக் கூறப்பட்டது தவறான தகவல் என்று அவர் குற்றம்சாட்டினார். தற்போது தமிழகத்தின் சொந்த மின் உற்பத்தி சுமார் 5,300 மெகாவாட் மட்டுமே எனக் குறிப்பிட்ட அவர், உற்பத்தித் திறனை அதிகரித்து மாநிலத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

சிறுமி காணாமல் போன விவகாரம்

சிறுமி காணாமல் போனது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், அந்தச் சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், தற்போதைய நிலவரத்தைக் கண்டறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

அரசுத் துறைகளில் முறைகேடுகள் தொடர்பாக ஆதாரங்கள் இருப்பவர்கள் முன்வந்து புகார் அளிக்கலாம் என்றும், தவறுகள் நடைபெற்றிருந்தால் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

Leave a Reply