பாப்பாரப்பட்டி அருகே சோகம்! கிணற்றில் மண் சரிந்து விவசாயி உயிரிழப்பு!
நீண்ட நேரத் தேடுதலுக்குப் பிறகு விவசாயியின் உடலை மீட்ட தீயணைப்புத் துறையினர் – போலீசார் விசாரணை.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே கிணற்றில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியின்போது மண் சரிந்து விழுந்ததில் விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள திருமல்வாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜியின் மகன் முருகன் (55). விவசாயியான இவர், தனது கிணற்றில் சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் அவரது உறவினர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றி வந்தனர்.
மதிய உணவு இடைவேளையின்போது, உடன் பணியாற்றிய இருவரும் உணவருந்தச் சென்றுள்ளனர். அப்போது முருகன் மட்டும் கிணற்றில் தொடர்ந்து பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக கிணற்றின் ஒரு பகுதியில் மண் சரிந்து விழுந்ததில் அவர் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டார்.
உணவருந்திவிட்டுத் திரும்பிய உறவினர்கள், கிணற்றின் ஒரு பகுதி சரிந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். முருகனை காணாததால் உடனடியாக பாலக்கோடு தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாப்பாரப்பட்டி காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் மண் சரிந்து விழுந்திருந்ததால், முருகனை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, கிணற்றைச் சுற்றி மின்விளக்குகள் அமைத்து தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இரவு நேரம், மழை மற்றும் மீட்புப் பணியில் ஏற்பட்ட சிரமங்கள் காரணமாகத் தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் மறுநாள் காலை 8 மணியளவில் மீண்டும் தேடுதல் பணி தொடங்கியது. நீண்ட நேரத் தேடுதலுக்குப் பிறகு முருகனின் உடலைத் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
இதையடுத்து, அவரது உடல் உடற்கூராய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பாப்பாரப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிணற்றில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியின்போது மண் சரிந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் திருமல்வாடி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்