ஓசூர் அருகே டைட்டன் டவுன்ஷிப் குடியிருப்பு பகுதியில் 300 போலீஸ் பாதுகாப்புடன் அத்துமீறி கால்வாய் அமைக்கும் பணி – பொதுமக்கள் கடும் கண்டனம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட டைட்டன் டவுன்ஷிப் பகுதியில், பொதுமக்களின் எதிர்ப்பையும் நீதிமன்ற அறிவுறுத்தலையும் மீறி, காவல்துறையின் பாதுகாப்புடன் மாநகராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டைட்டன் டவுன்ஷிப் உருவானதில் இருந்து கடந்த 30 ஆண்டுகளாக, அந்தப் பகுதி மக்கள் தங்கள் சொந்த செலவிலேயே சாலை, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை வசதிகளைப் பராமரித்து வருகின்றனர்.
இந்த குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள மற்றொரு குடியிருப்பு பகுதியில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக துளிர் நகர் பகுதிக்காக அமைக்கப்பட்ட கழிவுநீர் அமைப்பு முழுமையடையாமல், டைட்டன் டவுன்ஷிப் பகுதியில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக கழிவுநீர் கால்வாயை இணைக்க வேண்டிய 20 மீட்டர் இடைவெளியை விடுத்து, டைட்டன் டவுன்ஷிப் பிரதான சாலை வழியாக 150 மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைக்க மாநகராட்சி முடிவெடுத்ததே தற்போதைய பிரச்சனைக்கு முக்கியக் காரணமாகும்.
மேலும், 2006-ஆம் ஆண்டே அப்போதைய சார் ஆட்சியரால் 12 அடி மாட்டுவண்டிப் பாதை என உறுதி செய்யப்பட்ட சாலையை விடுத்து, அதனை ‘பட்டா இடம்’ என தற்போதைய மாநகராட்சி ஆணையர் கூறுவதாக குடியிருப்பு பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
டைட்டன் டவுன்ஷிப் சாலை மாநகராட்சிக்கு தானமாக (Gift Deed) வழங்கப்பட்டிருந்தாலும், பாதாளப் பயன்பாடுகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடனேயே வழங்கப்பட்டுள்ளது.
இதனால், கடந்த மார்ச் 30, 2026 அன்று வந்த நீதிமன்ற உத்தரவின்படியும், சமீபத்திய வழக்கு விசாரணையின்படியும், ‘பட்டா இடம்’ என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கவும், அதுவரை பணிகளை நிறுத்தவும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், நீதிமன்ற அறிவுறுத்தல் கடிதத்தை பொதுமக்கள் அளித்த மறுநாளே, எவ்வித முன்னறிவிப்புமின்றி 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினருடன் மாநகராட்சி அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர்.
இன்றுபணிகளைத் தடுத்த பொதுமக்களைக் கைது செய்வதாக மிரட்டியதோடு மட்டுமல்லாமல், ஜேசிபி இயந்திரங்கள் மூலம் தோண்டியதில் 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைக் குழாய்கள் பெருமளவு சேதமடைந்துள்ளன.
இதன் காரணமாக ஒட்டுமொத்த டவுன்ஷிப் பகுதியிலும் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் வலுக்கட்டாயமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாற்று வழிகளான 12 அடி மாட்டுவண்டிப் பாதை அல்லது காம்பவுண்ட் சுவருக்குப் பின்னால் உள்ள 1.5 அடி இடம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டியும் மாநகராட்சி நிர்வாகம் செவிசாய்க்கவில்லை.
மாநகராட்சியின் இந்த அராஜக மற்றும் ஜனநாயக விரோத செயல்பாடுகளை வன்மையாகக் கண்டித்துள்ள டைட்டன் டவுன்ஷிப் மக்கள், தங்கள் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து அடுத்தகட்ட சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக்குரல்