எழுத்தறிவின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு..! வந்தவாசி பள்ளியில் நிகழ்ச்சி.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம. புதூர் தொடக்கப் பள்ளியில், உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் டி.ஆர். நம்பெருமாள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சி.ம. புதூர் கிளை நூலகர் ஜா. தமீம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, உலக எழுத்தறிவு தினத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
செப்டம்பர் 8ஆம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை 1966ஆம் ஆண்டு UNESCO-வின் 14வது பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. 1967ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் செப்டம்பர் 8ஆம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
எழுத்தறிவு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கிய பங்கு வகிப்பதுடன், கல்வி, வேலைவாய்ப்பு, சமூக முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளுக்கு அடித்தளமாக அமைகிறது என நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது. UNESCO-வும் எழுத்தறிவை அடிப்படை மனித உரிமையாக வலியுறுத்தி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் எழுத்துக்களை எழுதியும், எழுத்தறிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் உதவி ஆசிரியை த. பாரதி நன்றி கூறினார். இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக வெற்றிக்குரல்