“நூலகம் ஒரு திறந்தநிலை பல்கலைக்கழகம்!” வந்தவாசி அருகே வாசகர் வட்ட கூட்டம்!

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வாசகர் வட்டத் தலைவர் பொன். சந்திரசேகரன் தலைமை வகித்தார். கிளை நூலகர் ஜா. தமீம் அனைவரையும் வரவேற்றார். நூலக புரவலர்கள் மு. விநாயகம், எம். விநாயகம் மற்றும் முன்னாள் ஊராட்சி தலைவர் ஆ. பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தெள்ளாறு பி.ஆர்.சி. ஆசிரியர் பயிற்றுநர் வெ. பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “நூலகம் என்பது திறந்தநிலை பல்கலைக்கழகம் போன்றது. நூலகத்தில் தொடர்ந்து வாசித்து வந்த பலர் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, சி.ம.புதூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர். நம்பெருமாள் சிறப்புரையாற்றினார். தங்களது பள்ளி மாணவர்கள் தினமும் சி.ம.புதூர் கிளை நூலகத்திற்கு சென்று புத்தகங்களை வாசித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

முக்கிய தீர்மானங்கள்

கூட்டத்தில் வாசகர் வட்டத்தின் சார்பில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, சி.ம.புதூர் கிளை நூலகத்தை விரிவாக்கம் செய்வதற்கான இடத்தை தேர்வு செய்வது, மேலும் நூலக வளர்ச்சிக்கு உதவும் வகையில் அதிகளவில் நூலக புரவலர்களை சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்வில் நூலக வாசகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவில் நூலக புரவலர் அ. சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Leave a Reply