வாசிப்பை நேசிக்க தொடங்கிய மாணவர்கள்: மருதாடு பள்ளியில் இளம் வாசிப்பு மன்றம் தொடக்கம்!
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மருதாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இளம் வாசிப்பு மன்றம் தொடக்க விழா மற்றும் வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சி. விஜயலதா தலைமை தாங்கினார். உதவி ஆசிரியை இ. ஜெத்ருத்மேரி அனைவரையும் வரவேற்றார். ஆசிரியைகள் சா. பிரியகாருண்யா, அ. வகிதா பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மருதாடு கிளை நூலக பொறுப்பு நூலகர் ஜா. தமீம் கலந்து கொண்டு இளம் வாசிப்பு மன்றத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் சிறு வயது முதலே நூலகத்திற்குச் சென்று புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், விடுமுறை நாட்களில் மாணவர்கள் அருகிலுள்ள மருதாடு கிளை நூலகத்திற்கு சென்று குழந்தைகளுக்கான இதழ்கள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் இடம்பெற்றுள்ள புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றும், இதன் மூலம் தங்களது அறிவையும் சிந்தனைத் திறனையும் வளர்த்துக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட இளம் வாசிப்பு மன்றத்தின் மூலம், புத்தக வாசிப்பு மற்றும் நூலக பயன்பாடு குறித்த ஆர்வத்தை மாணவர்களிடம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் ஆசிரியை சு. கீதா நன்றி கூறினார்.
தமிழக வெற்றிக்குரல்