“வாசிப்பு நமது சுவாசிப்பாக இருக்க வேண்டும்” – மருதாடு பள்ளியில் வாசிப்பு விழிப்புணர்வு.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மருதாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வெ. ராம்குமார் தலைமை வகித்தார். பசுமைப்படை ஆசிரியர் பி. பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா தலைவர் சு. தனசேகர், மாணவர்களிடையே வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
அப்போது அவர், “வாசிப்பு பழக்கத்தை சிறுவயது முதலே தொடங்க வேண்டும். தொடர்ந்து வாசிப்பதன் மூலம் சிறந்த சிந்தனையாளர்களாக உருவாக முடியும்” என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மருதாடு கிளை நூலக பொறுப்பு நூலகர் ஜா. தமீம் பேசுகையில், “வாசிப்பு என்பது நமது சுவாசிப்பாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
மேலும், பள்ளி காலாண்டு விடுமுறையில் மாணவர்கள் அருகிலுள்ள மருதாடு கிளை நூலகத்திற்கு சென்று புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
மருதாடு கிளை நூலகத்தில் பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் படைப்புகள் உள்ளிட்ட ஏராளமான நூல்கள் இருப்பதாகவும், மாணவர்கள் நூலகத்தைப் பயன்படுத்தி தங்களது வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஜா. தமீம் தெரிவித்தார்.
வாசிப்பின் மூலம் அறிவை விரிவுபடுத்துவதுடன், சிந்தனைத் திறனையும் வளர்த்துக் கொள்ள முடியும் என்ற கருத்துகள் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டன.
நிகழ்ச்சியின் நிறைவில் மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.
தமிழக வெற்றிக்குரல்