ராமநாதபுரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு: ரூ.36,250 பறிமுதல்; 5 பேர் கைது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் நகராட்சிக்கு சொந்தமான புதிய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிடங்கள் தொடர்பாக முறைகேடு நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட இரண்டு நாள் சோதனை நிறைவு பெற்றுள்ளது. இந்த நடவடிக்கையில் கணக்கில் வராத பணம் மற்றும் போலி ரசீதுகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் நகராட்சிக்கு சொந்தமான புதிய பேருந்து நிலையத்தில், நகராட்சி மன்ற தீர்மானம் இன்றி இருசக்கர வாகன நிறுத்துமிடங்கள் செயல்பட்டு வருவதாகவும், நகராட்சியின் அசல் ரூ.20 ரசீதைப் போன்ற போலி ரசீதுகள் அச்சடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு, வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த 26ஆம் தேதி திங்கட்கிழமை மதியம், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலர் மற்றும் ஆய்வுக்குழு ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் புதிய பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் அடிப்படையில், நகராட்சி வருவாய் ஆய்வாளர் ரமேஷ் (36), வருவாய் உதவியாளர்கள் மாரிமுத்து (38), ரிஷி கேசவன் (47), துப்புரவு மேற்பார்வையாளர் ஆனந்தன் (55) மற்றும் அச்சக உரிமையாளர் ஜோசப் ஜெயராஜன் (68) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வருவாய் உதவியாளர் மாரிமுத்துவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.23,500 ரொக்கம் மற்றும் போலி ரசீதுகள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களை ராமநாதபுரம் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் வசூலிக்கப்பட்டதாக கூறப்படும் தொகை, பயன்படுத்தப்பட்ட ரசீதுகள் மற்றும் அதில் தொடர்புடையவர்களின் பங்கு உள்ளிட்டவை குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக்குரல்