பணியில் இருந்தபோது உயிரிழந்த பெண் தலைமைக் காவலர்: குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது எதிர்பாராத விதமாக காயமடைந்து உயிரிழந்த பெண் தலைமைக் காவலர் எம். கண்ணகியின் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் காவல் நிலையத்தில் பெண் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் எம். கண்ணகி (34). இவர் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி பரமக்குடி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, ஒரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் காயமடைந்த சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தகராறை தடுக்க முயன்றபோது, அங்கிருந்து தப்பி ஓடிய ஒருவரை பிடிப்பதற்காக பெண் தலைமைக் காவலர் கண்ணகி அவரை துரத்திச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தவறி விழுந்து மயங்கிய நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்ணகிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பெண் தலைமைக் காவலர் கண்ணகியின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர், உயிரிழந்த தலைமைக் காவலர் கண்ணகியின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக உயிரிழந்த பெண் தலைமைக் காவலரின் மறைவு காவல்துறையினர் மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply