ராமநாதபுரத்தில் 370 பள்ளிகளில் 33,093 மாணவர்களுக்கு காலை உணவு: விரிவுபடுத்தப்பட்ட காமராஜர் காலை உணவுத் திட்டம்.
தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம், அரசு பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ–மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவ–மாணவிகள் பள்ளி நாட்களில் தினமும் சத்தான காலை உணவைப் பெற்று வருகின்றனர்.
மாணவர்களின் நலன், பள்ளி வருகை மற்றும் கல்வி கற்கும் திறனை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், பள்ளி நாட்களில் மாணவர்களுக்கு தினமும் தரமான மற்றும் சத்தான காலை உணவு வழங்கப்படுகிறது.
370 பள்ளிகளில் 33,093 மாணவர்கள் பயன்பெறுகின்றனர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக மட்டும் காலை உணவுத் திட்டம் 370 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் 328 பள்ளிகள் ஊரகப் பகுதிகளிலும், 42 பள்ளிகள் நகர்ப்புறப் பகுதிகளிலும் அமைந்துள்ளன. இந்தப் பள்ளிகளில் பயிலும் மொத்தம் 33,093 மாணவ–மாணவிகளுக்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பள்ளி நாட்களில் தினமும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 1,120 பள்ளிகளில் 47,174 மாணவ–மாணவிகள் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
வாரந்தோறும் மாறுபட்ட உணவு வகைகள்
மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்குவதுடன், உணவில் பல்வேறு வகைகளை ஏற்படுத்தும் வகையில் வாரந்தோறும் மாறுபட்ட உணவுகள் சுழற்சி முறையில் வழங்கப்படுகின்றன.
- திங்கட்கிழமை: வெண்பொங்கல், காய்கறி சாம்பார்
- செவ்வாய்க்கிழமை: ரவா கிச்சடி, காய்கறி சாம்பார்
- புதன்கிழமை: வெண்பொங்கல், காய்கறி சாம்பார்
- வியாழக்கிழமை: கோதுமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார்
- வெள்ளிக்கிழமை: சேமியா கிச்சடி, காய்கறி சாம்பார்
இதன் மூலம் மாணவர்களுக்கு பள்ளியிலேயே சத்தான காலை உணவு கிடைப்பதுடன், காலை உணவைத் தவறவிடாமல் பள்ளிக்கு வருவதற்கும், வகுப்பறைப் பாடங்களில் கவனம் செலுத்துவதற்கும் இத்திட்டம் உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் அனுபவம்
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் புதுமடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 6ஆம் வகுப்பு மாணவி ஹரிணி உமா, தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறுகையில், தனது பெற்றோர் அதிகாலையிலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதால், சில நேரங்களில் தனக்கு காலை உணவு தயார் செய்து கொடுக்க முடியாத நிலை இருந்ததாக தெரிவித்தார்.
1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே காலை உணவு வழங்கப்பட்டு வந்ததைப் பார்த்து, 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இதுபோன்ற உணவு எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததாகவும் அவர் கூறினார்.
தற்போது தங்களுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த அவர், பள்ளியிலேயே தினமும் காலை உணவு கிடைப்பதால் காலையில் உணவு கிடைக்குமா என்ற கவலையின்றி பள்ளிக்கு வர முடிவதாக கூறினார்.
மேலும், ரவா உப்புமா, கோதுமை ரவா உப்புமா, வெண்பொங்கல் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் காய்கறி சாம்பாருடன் வழங்கப்படுவதாகவும், உணவு சுவையாகவும் சத்தானதாகவும் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தினமும் மாறுபட்ட உணவு வகைகள் வழங்கப்படுவதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் காலை உணவை உட்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி, பள்ளியிலேயே சத்தான உணவு கிடைக்க வழிவகை செய்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு தனது சார்பிலும், குடும்பத்தின் சார்பிலும், மாணவ–மாணவிகளின் சார்பிலும் நன்றி தெரிவிப்பதாக மாணவி ஹரிணி உமா கூறினார்.
தமிழக வெற்றிக்குரல்