காஞ்சிபுரத்தில் சோகம்: கிரிக்கெட் பந்து தலையில் தாக்கி 11 வயது சிறுவன் உயிரிழப்பு!

காஞ்சிபுரம், ஆக. 29:

காஞ்சிபுரத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன், எதிர்பாராதவிதமாக வேகமாக வந்த பந்து தலையில் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட என்ஜிஓ நகர் பகுதியைச் சேர்ந்த சுகிர்தா லட்சுமியின் மகன் சாய் மோதிஷ். 11 வயதான இவர், அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கிரிக்கெட் விளையாடியபோது நேர்ந்த விபரீதம்

கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி மிலாது நபி அரசு விடுமுறையை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டுத் திடலில் சாய் மோதிஷ் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.

அந்த மைதானத்தில் பலரும் வெவ்வேறு இடங்களில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எங்கிருந்தோ வேகமாக வந்த கிரிக்கெட் பந்து எதிர்பாராதவிதமாக சிறுவனின் தலையில் பலமாக தாக்கியது.

பந்து தாக்கியதில் மோதிஷ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிறுவன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன், ஆகஸ்ட் 28ஆம் தேதி மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட உடல்

சிறுவனின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

எதிர்பாராத வகையில் ஏற்பட்ட இந்த சம்பவம் சிறுவனின் குடும்பத்தினரையும், என்ஜிஓ நகர் பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை எந்த திசையில் இருந்து பந்து தாக்கியது, சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply