அய்யம்பேட்டை அரசு பள்ளியில் காமராஜர் காலை உணவு திட்டம் தொடக்கம்: மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய எம்.எல்.ஏ. முனிரத்தினம்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தின் கீழ் 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தத் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்த நிலையில், அதனைத் தொடர்ந்து அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் ஜெ. முனிரத்தினம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு காலை உணவை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். அவருடன் துணை ஆட்சியர் சாதிக் அலியும் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினார்.

இத்திட்டத்தின் மூலம் அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 114 மாணவ, மாணவிகள் பயனடைகின்றனர்.

மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் கல்வி சார்ந்த தேவைகளை கருத்தில் கொண்டு காலை உணவு வழங்கும் திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டம், விரிவாக்கத்தின் மூலம் அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு சத்தான காலை உணவு வழங்கப்படுவதன் மூலம் அவர்களின் அன்றாட கல்விச் செயல்பாடுகளுக்கு உதவியாக இருக்கும் என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply