உத்திரமேரூர் தொகுதியில் அடுத்தடுத்து மக்கள் பயன்பாட்டு திட்டங்கள் திறப்பு! அமைச்சர் தென்னரசு, எம்.எல்.ஏ. முனிரத்தினம் பங்கேற்பு.
உத்திரமேரூர்:
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டிடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் திறந்து வைக்கப்பட்டன.
இளநகர், களியபூண்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இதில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு, உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம், மாவட்ட ஆட்சியர் சினேகா ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுகாதார மையங்களை திறந்து வைத்தனர்.
திருப்புலிவனம் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள்
இதனைத் தொடர்ந்து, திருப்புலிவனம் அரசு பள்ளியில் பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டது.
மாணவர்களுக்கு தேவையான கூடுதல் வகுப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், பள்ளியின் கல்விச் சூழல் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படும் வகையில் இந்த புதிய கட்டிடம் அமைந்துள்ளது.
அவலூரில் புதிய சமையல் கூடம்
மேலும், காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அவலூர் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மதிய உணவுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சேமிப்பு அறையுடன் கூடிய புதிய சமையல் கூடமும் திறந்து வைக்கப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு தயாரிக்கும் பணிகளுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்த சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு
இந்நிகழ்வுகளில் அரசு அலுவலர்கள், ஒன்றிய செயலாளர்கள் ரஞ்சித் குமார், வினோத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுகாதாரம், கல்வி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் அடுத்தடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
தமிழக வெற்றிக்குரல்