சி.ம. புதூர் கிளை நூலகத்தில் பசுமை நுகர்வோர் தின விழிப்புணர்வு: பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தப்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம. புதூர் கிளை நூலகத்தில் பசுமை நுகர்வோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் பொன். சந்திரசேகரன் தலைமை வகித்தார். நல்நூலகர் ஜா. தமீம் அனைவரையும் வரவேற்றார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆ. பொன்னுசாமி, நூலகப் புரவலர்கள் அ. குலாப் ஜான், கு. மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட கைத்தறி ஆய்வாளர் ஷா. ஷாநவாஸ் கலந்து கொண்டு, பசுமை நுகர்வோர் தினத்தின் முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையா என்பதை ஆராய்ந்து வாங்க வேண்டும் என வலியுறுத்தினார். இயற்கைக்கு எதிரான மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் நெகிழிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் பசுமை நுகர்வோர் தினத்தின் நோக்கம், சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன் பசுமை மற்றும் தூய்மையை பேணுவதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து, நூலகத்திற்கு வந்த வாசகர்களுக்கு மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன. பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பைகளைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் நூலக வாசகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக ஊராட்சி செயலாளர் கன்னியப்பன் நன்றி கூறினார்.
தமிழக வெற்றிக்குரல்