செய்யாறு புத்தகத் திருவிழாவில் இரண்டாம் நாள் உரையரங்கம்: வாசிப்பின் அவசியம் குறித்து தமிழ் ஆர்வலர்கள் உரை.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆர்சிஎம் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவின் இரண்டாம் நாள் மாலை உரையரங்கம் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழா தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற உரையரங்கிற்கு செய்யாறு வட்ட முத்தமிழ்ச் சங்கத் தலைவர் எறும்பூர் கை. செல்வகுமார் தலைமை தாங்கி நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
நூல்களின் பயன்கள் குறித்து உரை
‘நூல்களின் நன்மைகள்’ என்ற தலைப்பில் முத்தமிழ்ச் சங்க துணைத் தலைவர் எம். சுந்தரமூர்த்தி உரையாற்றினார். பல்வேறு மேற்கோள்களை முன்வைத்து, தமிழ் வாசிப்பு வரலாற்றின் சிறப்புகள் மற்றும் நூல்கள் வழங்கும் பயன்கள் குறித்து விளக்கினார்.
தொடர்ந்து, ‘வாசிப்பை நேசிப்போம்’ என்ற தலைப்பில் சங்க செயற்குழு உறுப்பினர் வா. இளவரசி உரையாற்றினார். இலக்கியம் மற்றும் ஆன்மிகத்தை தொடர்புபடுத்தி, வாசிப்பின் அவசியம் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் அறிவு சார்ந்த பயன்கள் குறித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து வந்தை ஜா. தமீம் நூல்கள் வாசிப்பது தொடர்பான கவிதையை வாசித்து உரையாற்றினார்.
தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்பு
உரையரங்கில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியவர்களுக்கு தமிழ் சங்கம் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் பதிப்பக உரிமையாளர் மா. அமரேசன், வருவாய் ஆய்வாளர் திருமால் மருகன், செய்யாறு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க செயலாளர் எம். மணி, மாவட்ட துணைத் தலைவர் ஆர். பலராமன், செய்யாறு வட்ட தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த எச். சுதாகர், அ. முபாரக், அறிவொளி க. வெங்கடேசன் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வாசிப்பு, தமிழ் இலக்கியம் மற்றும் நூல்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த உரையரங்கம் புத்தகத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
தமிழக வெற்றிக்குரல்