ஓசூர் அருகே பட்டப்பகலில் ஐடி ஊழியர் வீட்டில் கொள்ளை: 19 சவரன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் திருட்டு!

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தசரா விடுமுறைக்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்றிருந்த ஐடி ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து, 19 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுமுறைக்குச் சென்ற குடும்பம்

ஓசூர் காந்திநகர், பென்னாமரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் அமிர்தராஜ் (36), பெங்களூருவில் உள்ள பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தசரா பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, கடந்த 17ஆம் தேதி ஸ்டாலின் அமிர்தராஜ் தனது மனைவி, குழந்தைகளுடன் ராயக்கோட்டை அருகே உள்ள தங்களது சொந்த ஊரான ஜக்கசமுத்திரத்திற்குச் சென்றுள்ளார்.

விடுமுறையைச் சொந்த ஊரில் கழித்துவிட்டு, இன்று (அக். 21) மதியம் சுமார் 3 மணியளவில் குடும்பத்துடன் பென்னாமரத்தில் உள்ள வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

உடைந்து கிடந்த வீட்டின் கதவு

அப்போது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டுத் திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பீரோவில் வைக்கப்பட்டிருந்த 19 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

மோப்பநாய், தடய அறிவியல் நிபுணர்கள் விசாரணை

இதுகுறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டதுடன், தடய அறிவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, கைரேகைகள் உள்ளிட்ட முக்கியத் தடயங்களைச் சேகரித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களைக் கண்டறியத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பென்னாமரம் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply