ஓசூர் அருகே மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை! சின்னஎலசகிரியில் அதிர்ச்சி சம்பவம்.

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்:

ஓசூர் அருகே சின்னஎலசகிரி பாலாஜி நகரில், கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியைத் தாக்கிக் கொலை செய்ததாகக் கூறப்படும் கணவர், பின்னர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரது உடல்களையும் கைப்பற்றிய சிப்காட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுப்பழக்கத்தால் அடிக்கடி தகராறு

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகேயுள்ள ஜேசுராஜபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமய்யா (51). இவரது மனைவி வினோதா (46). இந்தத் தம்பதியினர் ஓசூர் அருகேயுள்ள சின்னஎலசகிரி பாலாஜி நகர் பகுதியில் வசித்து வந்தனர்.

இவர்களுக்கு 21 வயதில் தப்பகுளி என்ற மகனும், திருமணமாகி புகுந்த வீட்டில் வசித்து வரும் விஜயலட்சுமி (25), நதியா (20) ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

லட்சுமய்யா கடுமையான மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும், இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

மனைவியைத் தாக்கிக் கொலை செய்ததாகக் கூறப்படும் கணவர்

இந்நிலையில், நேற்று இரவும் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் சண்டையிட்டுக் கொண்டிருந்ததால், அவர்களது மகன் அருகில் உள்ள தனது சித்தப்பா வீட்டிற்குத் தூங்கச் சென்றுள்ளார்.

அப்போது, மதுபோதையில் இருந்த லட்சுமய்யா வீட்டிற்குள் மனைவி வினோதாவைக் கடுமையாகத் தாக்கிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, வீட்டிற்கு வெளியே இருந்த நாக மரத்தில் லட்சுமய்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது.

சிப்காட் காவல்துறையினர் விசாரணை

இன்று காலை அக்கம்பக்கத்தினர் இருவரும் உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் காவல்துறையினர், இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிப்காட் காவல் பொறுப்பு ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஜெயகணேஷ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply