தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் பள்ளியில் அயோடின் பற்றாக்குறை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மற்றும் பென்னாகரம் காந்தி நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கம் இணைந்து, தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உலக அயோடின் பற்றாக்குறைக் குறைபாடுகள் தடுப்பு தினம் 2026 விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று, அயோடின் சத்தின் அவசியம் மற்றும் அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து அறிந்துகொண்டனர்.
பள்ளித் தலைமையாசிரியை தலைமையில் நிகழ்ச்சி
பள்ளியின் துணைத் தலைமையாசிரியர் முருகன் வரவேற்புரையாற்றினார். பள்ளித் தலைமையாசிரியை ரேவதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் பொறுப்பு ரவி, பென்னாகரம் காந்தி நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கத் தலைவர் சம்பத், வர்த்தகர் சங்கத் தலைவர் நாகராஜன், விநியோகிப்பாளர் சங்கப் பிரதிநிதிகள் பெருமாள், கணேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் மேற்பார்வையில், தர்மபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் சிறப்புரையாற்றினார்.

மாணவிகளுக்கு அயோடின் சத்தின் அவசியம் குறித்து விளக்கம்
தலைமையாசிரியை ரேவதி பேசுகையில், பாதுகாப்பான உணவும் அயோடின் சத்தும் அனைவருக்கும் அவசியமானவை என்று குறிப்பிட்டார். குறிப்பாக, மாணவிகள் மற்றும் பெண்களின் உடல்நலத்திலும், கர்ப்பகால நலனிலும் அயோடின் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு அயோடின் அவசியம் என்பதை மாணவிகள் உணர்ந்து, நிகழ்ச்சியில் தெரிவிக்கப்படும் கருத்துகளைத் தங்கள் குடும்பத்தினரிடமும் சுற்றுப்புற மக்களிடமும் எடுத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அயோடின் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகள்
உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் பேசுகையில், அயோடின் என்பது தைராய்டு ஹார்மோன்கள் உருவாகத் தேவையான முக்கிய நுண்ணூட்டச் சத்து என்று விளக்கினார். தைராய்டு ஹார்மோன்கள் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றார்.
அயோடின் குறைபாட்டால் மூளை வளர்ச்சி பாதிப்பு, நினைவாற்றல் குறைவு, முன்கழுத்துக் கழலை, கர்ப்பகாலச் சிக்கல்கள், குறைப்பிரசவம் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியில் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் எடுத்துரைத்தார். எனவே, அயோடின் செறிவூட்டப்பட்ட உப்பைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை அரசு தொடர்ந்து ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
அயோடின் கலந்த உப்பைக் கண்டறிவது எப்படி?
அயோடின் கலந்த உப்பையும் அயோடின் இல்லாத உப்பையும் அடையாளம் காண்பது குறித்து மாணவிகளுக்கு நேரடி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. உப்பில் அயோடின் உள்ளதா என்பதைக் கண்டறிய எம்.பி.ஐ. கருவி மற்றும் ஸ்டார்ச் கரைசலைப் பயன்படுத்தும் முறை விளக்கப்பட்டது.
மேலும், உப்புப் பொட்டலங்களில் அயோடின் இருப்பைக் குறிக்கும் அடையாளங்களைச் சரிபார்த்து வாங்க வேண்டியதன் அவசியமும் எடுத்துரைக்கப்பட்டது. வீட்டில் உப்பை முறையாகப் பாதுகாப்பது, ஈரப்பதம் மற்றும் திறந்த வெளித் தொடர்பைக் குறைப்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.
உப்பின் அளவைக் குறைக்கவும் அறிவுறுத்தல்
ஒரு நாளைக்கு பெரியவர்கள் உட்கொள்ள வேண்டிய உப்பின் அளவு சுமார் 5 கிராம் எனக் குறிப்பிட்ட உணவு பாதுகாப்பு அலுவலர், அதிகப்படியான உப்புப் பயன்பாட்டால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் சிறுநீரகப் பாதிப்புகளின் அபாயம் அதிகரிக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்துவதுடன், உப்பை மூடியுள்ள பாத்திரத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
டெங்கு தடுப்பு குறித்தும் விழிப்புணர்வு
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கத் தலைவர் சம்பத்குமார் கருத்துரை வழங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதனைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கினார்.
நிகழ்ச்சியின் நிறைவில், அயோடின் சத்தின் அவசியம் மற்றும் அயோடின் குறைபாட்டைத் தடுப்பது தொடர்பாக உறுதிமொழி ஏற்கப்பட்டது. நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் மாவட்டச் செயலாளர் பெரியசாமி, வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள், சுகாதார ஆய்வாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 600-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சி, ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
தமிழக வெற்றிக்குரல்