தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்: பாலக்கோட்டில் சட்டத் தூண்கள் அறக்கட்டளையினர் ஆர்ப்பாட்டம்!

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், பயணச் சீட்டுகளில் தேதி, பேருந்து எண் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்படாமல் வழங்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும், இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, புகார் அளித்தவரையே மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தப் புகார்களின் அடிப்படையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலரைக் கண்டித்து, சட்டத் தூண்கள் அறக்கட்டளையின் தருமபுரி மாவட்டத் தலைவர் பி.கே. சிவா தலைமையில் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு எதிராகக் கோஷங்கள்

இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டத் தூண்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் குணசேகரன், மாநிலப் பொருளாளர் காவேரி, மாநிலத் துணைத் தலைவர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, முறையான விவரங்கள் இல்லாமல் பயணச் சீட்டுகள் வழங்கப்படுவது மற்றும் புகார் அளிப்பவர்களை மிரட்டுவதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கண்டித்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் நிர்வாகிகள் கௌதம், கணேஷ், முருகன், ரகுபதி, முனிராஜி, சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது மற்றும் பயணச் சீட்டு வழங்குவதில் உள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கையாக இருந்தது.

Leave a Reply