ஆவடி தற்காலிகப் பேருந்து நிலையத்தில் எம்.எல்.ஏ ரமேஷ் குமார் திடீர் ஆய்வு! பயணிகளின் குறைகளை உடனடியாகத் தீர்க்க அறிவுறுத்தல்.

ஆவடி: சென்னை புறநகர்ப் பகுதியான ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம் புதிதாகக் கட்டப்பட்டு வரும் நிலையில், தற்போது தற்காலிகப் பேருந்து நிலையம் தனியார் இடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனப் பயணிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

குறிப்பாக, பேருந்து நிலைய வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாக இருப்பதாகவும், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் முறையாக இல்லை என்றும் கூறப்பட்டது. இதையடுத்து, ஆவடி சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் குமார் தற்காலிகப் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பேருந்து நிலையக் கிளை மேலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அழைத்து, பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாகச் செய்து தருமாறு அறிவுறுத்தினார்.

மேலும், பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்கப்படுவதையும், பேருந்துகளின் எண்ணிக்கையில் குறைபாடு ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பேருந்து நிலையத்தில் சேறும் சகதியுமாக உள்ள பகுதிகளைச் சீரமைத்து, முறையான சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும், எரியாத மின்விளக்குகளை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பயணிகள் பயன்படுத்தும் கழிப்பறைகளை முறையாகப் பராமரிக்கவும், குடிநீர் வசதியை ஏற்படுத்தவும் உத்தரவிட்டார். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் அமர்வதற்குப் போதிய இருக்கைகள் அமைக்க வேண்டும் என்றும், மழைக்காலத்தில் பயணிகள் சிரமமின்றிக் காத்திருக்கும் வகையில் தற்காலிக மேற்கூரைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஆய்வின்போது, பேருந்துகளுக்காகக் காத்திருந்த பொதுமக்களும் தங்களது குறைகளையும் கோரிக்கைகளையும் சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர். அவற்றைக் கேட்டறிந்த ரமேஷ் குமார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பயணிகளின் சிரமங்களை எடுத்துரைத்து, குறைகளை உடனடியாகச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பொதுமக்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார்.

Leave a Reply