பாலக்கோடு அருகே சொகுசு கார் விபத்து! மருத்துவக் கல்லூரி மாணவர் படுகாயம்.

பாலக்கோடு: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மகேந்திரமங்கலம் அருகே நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார், சாலை மையத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மருத்துவக் கல்லூரி இறுதியாண்டு மாணவர் பலத்த காயமடைந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முனீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்த ஜோசன் ஆபர்கான் (23), பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி படிப்பின் இறுதியாண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், சேலத்தில் வசிக்கும் தனது அக்கா வீட்டிற்குச் செல்வதற்காக, தனது சொகுசு காரில் ஓசூர்–சேலம் அதிவிரைவுச் சாலையில் பயணித்து, பாலக்கோடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பொம்மனூர் ஏரிக்கரை அருகே சென்றபோது, நாய் ஒன்று திடீரென சாலையின் குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் காரைக் கட்டுப்படுத்த முடியாமல், சாலையின் மையத் தடுப்பில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜோசன் ஆபர்கான் பலத்த காயமடைந்தார்.

விபத்தைப் பார்த்த அருகிலிருந்தவர்கள், அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.

இந்த விபத்து குறித்து மகேந்திரமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply