“தமிழ் படிக்கத் தெரியவில்லை” – வீட்டை விட்டு வெளியேறிய 5 சிறுவர்கள் மீட்பு!
தமிழ் படிக்கத் தெரியவில்லை என பெற்றோரிடம் தெரிவித்த சிறுவர்கள் – காவல் நிலையத்தில் அறிவுரை வழங்கிய எம்.எல்.ஏ. பாலமுருகன்
சென்னை:
தமிழ் பாடம் படிக்கத் தெரியாததால் வீட்டை விட்டு வெளியேறியதாக, தெலுங்கானா மாநிலத்தில் மீட்கப்பட்ட ஐந்து சிறுவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மண்ணூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள் மாயமான நிலையில், அவர்களைத் தேடிய போலீசார் தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் மீட்டனர். இதையடுத்து, சிறுவர்கள் இன்று காலை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
விசாரணையின்போது, தங்களுக்குத் தமிழ் படிக்கத் தெரியவில்லை என்றும், ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் கல்வி கற்கும் பள்ளியில் சேர்க்குமாறு பெற்றோரிடம் கேட்டதாகவும் சிறுவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பெற்றோர் தங்களைத் தமிழ் வழிப் பள்ளியில் சேர்த்ததால் படிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்ததாகவும், பள்ளி முடிந்ததும் வீட்டிலிருந்த பணம் மற்றும் கைப்பேசியை எடுத்துக்கொண்டு, தங்களது சொந்த மாநிலமான பீகாருக்குச் செல்வதற்காக ரயிலில் பயணம் செய்ததாகவும் சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் சிறுவர்களையும் அவர்களது பெற்றோரையும் சந்தித்த அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன், இரு தரப்பினருக்கும் அறிவுரை வழங்கினார்.
ஐந்து சிறுவர்களும் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, பெற்றோர்கள் நிம்மதியடைந்தனர். குழந்தைகளின் கல்வி தொடர்பான விருப்பங்களையும் சிரமங்களையும் பெற்றோர் புரிந்துகொண்டு செயல்பட வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
தமிழக வெற்றிக்குரல்