37 ஆண்டுகால சட்டப் போராட்டத்துக்குப் பின் நிலம் அளவீடு! உத்திரமேரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பணி – அதிகாரிகளுடன் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதம்!

நீதிமன்ற உத்தரவின்படி மீனாட்சி அம்மாள் கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் அளவீடு – விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படலாம் என எதிர்பார்ப்பு

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே தனியார் கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை மீட்பது தொடர்பாக, 37 ஆண்டுகால சட்டப் போராட்டத்துக்குப் பிறகு நீதிமன்ற உத்தரவின்படி நில அளவீடு செய்யும் பணிகள் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்றன. அப்போது நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும் நபர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த மல்லியங்கரணை பகுதியில் மீனாட்சி அம்மாள் கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலத்தில் சிலர் வீடுகள் கட்டிக் குடியிருந்து வருவதாகவும், நிலத்தை மீட்பதற்குக் கல்வி அறக்கட்டளை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அங்கிருந்து வெளியேற அவர்கள் மறுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, நிலத்தை மீட்பதற்காகக் கல்வி அறக்கட்டளை சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. சுமார் 37 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில், நீதிமன்ற ஊழியர்கள் முன்னிலையில் வருவாய்த் துறையினர் மற்றும் நில அளவைத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக அப்பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது, நிலத்தை அளவீடு செய்ய ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறப்படும் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. நீதிமன்ற உத்தரவின்படியே நிலம் அளவீடு செய்யப்படுவதாகவும், பணிகளைத் தடுக்க முயன்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நில அளவீட்டுப் பணிகள் தொடர்ந்தன.

நில அளவீட்டுப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்பு அப்பகுதியில் எழுந்துள்ளது. நீண்டகாலமாக நீடித்து வந்த நில உரிமைப் பிரச்சினை காரணமாக மல்லியங்கரணை பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Leave a Reply