மாமல்லபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி முகாம் தொடக்கம்! அமைச்சர் என். ஆனந்த் பங்கேற்பு.

மாமல்லபுரம்: தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், சட்டமன்றப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அவர்களின் முன்னெடுப்பில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சித் திட்டத்தின் முதல் அணிக்கான பயிற்சி முகாம் இன்று (அக்டோபர் 27) செவ்வாய்க்கிழமை மாமல்லபுரத்தில் தொடங்கியது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். மக்கள் நலன் சார்ந்த நிர்வாகம், சட்டமன்ற உறுப்பினர்களின் பொறுப்புகள், பொதுச் சேவையில் தலைமைத்துவம், தொகுதி மேம்பாட்டுப் பணிகள் மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் குறித்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும், அரசின் பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல், பொதுமக்களின் தேவைகளை அறிந்து திட்டமிடுதல், பொறுப்புணர்வுடன் மக்கள் பணியாற்றுதல் மற்றும் தொகுதியின் வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட அம்சங்களும் பயிற்சியில் இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்வில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சரும், தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினருமான என். ஆனந்த் பங்கேற்றுப் பேசினார். அப்போது, தலைமைத்துவம் என்பது பதவியோ அதிகாரமோ மட்டுமல்ல; அது பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய கடமை என்றும், மற்றவர்களை ஊக்குவித்து அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து வளர்ப்பதே உண்மையான தலைமைத்துவம் என்றும் குறிப்பிட்டார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் நலனையும் தொகுதி வளர்ச்சியையும் முன்னிறுத்திச் செயல்பட வேண்டும் என்றும், பொதுமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும், அரசின் திட்டங்கள் உரிய பயனாளிகளைச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதும் அவர்களின் முக்கியக் கடமை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு, மின்னணு ஆளுகை மற்றும் தரவுகளின் அடிப்படையிலான முடிவெடுத்தல் போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அரசின் நிர்வாகத் திறனையும் பொதுச் சேவையின் தரத்தையும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இந்த இரண்டு நாள் பயிற்சி முகாம், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணித் திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும், புதிய அணுகுமுறைகளைக் கற்றுக்கொள்ளவும் உதவும் என்றும் கூறினார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் மு. ரவிசங்கர், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு சட்டமன்ற அரசு தலைமைக்கொறடா ஆர். சபரிநாதன், மேகாலயா அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும் வளர்ச்சி ஆணையருமான டாக்டர் சம்பத் குமார், தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளர் ஆர். சாந்தி, கூடுதல் செயலாளரும் ஒருங்கிணைப்பு அலுவலருமான பி. தேன்மொழி, ஓய்வுபெற்ற நீதியரசர் கே. சந்துரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சட்டமன்ற உறுப்பினர்களின் தலைமைத்துவத் திறன்களை வலுப்படுத்தி, மக்கள் நலனை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தப் பயிற்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply