அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% வரை போனஸ்! ₹367.20 கோடி ஒதுக்கீடு – முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவிப்பு.

சென்னை: தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2025–2026ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக 20 விழுக்காடு வரை வழங்கப்படும் என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

இதற்காக மொத்தம் ₹367 கோடியே 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், இதன் மூலம் 2,60,497 தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ₹8,400 முதல் அதிகபட்சம் ₹16,800 வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாகப் பெறுவார்கள்.

தொழிலாளர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் திறமையான மனிதவளம் ஆகியவை தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் முக்கியப் பங்காற்றுவதாக அரசு குறிப்பிட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டில் தொழிலாளர்கள் ஆற்றும் பங்களிப்பை அங்கீகரித்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எந்தெந்த நிறுவன ஊழியர்களுக்கு எவ்வளவு?

1. இலாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்கள்

ஒதுக்கீட்டடிப்படையிலான உபரித் தொகையைக் கணக்கில் கொண்டு, தகுதியுள்ள ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு 8.33% மிகை ஊதியமும், 11.67% கருணைத் தொகையும் என மொத்தம் 20% வரை வழங்கப்படும்.

2. குறிப்பிட்ட முக்கிய பொதுத்துறை நிறுவனங்கள்

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுடைய ஊழியர்களுக்கு 8.33% மிகை ஊதியமும், 11.67% கருணைத் தொகையும் என மொத்தம் 20% வழங்கப்படும்.

3. உபரித் தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்கள்

ஒதுக்கீட்டடிப்படையிலான உபரித் தொகை இல்லாத நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய ஊழியர்களுக்கு 8.33% குறைந்தபட்ச மிகை ஊதியமும், 1.67% கருணைத் தொகையும் என மொத்தம் 10% வழங்கப்படும்.

4. வீட்டுவசதி மற்றும் குடிநீர் தொடர்பான நிறுவனங்கள்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33% மிகை ஊதியமும், 1.67% கருணைத் தொகையும் வழங்கப்படும்.

5. தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம்

இங்கு பணிபுரியும் தகுதியுடைய ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33% மிகை ஊதியம் வழங்கப்படும்.

6. தற்காலிகத் தொழிலாளர்கள்

தமிழ்நாடு நகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ₹3,000 கருணைத் தொகையாக வழங்கப்படும்.

தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட உதவும் நடவடிக்கை

மிகை ஊதியம் பெறுவதற்கான சம்பள உச்சவரம்பு மற்றும் கணக்கீட்டு விதிகளில் தளர்வு அளித்து, தகுதியுடைய ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்களுக்கு இந்தத் தொகை வழங்கப்படுவதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவன ஊழியர்களை மேலும் ஊக்கத்துடன் பணியாற்றச் செய்வதுடன், எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட உதவும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை தொடர்பான உத்தரவுகள் தனியாக வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply