ஆட்டோ கட்டணம் அதிரடி மாற்றம்! குறைந்தபட்சக் கட்டணம் ரூ.50 – கிலோமீட்டருக்கு ரூ.25.
இரவு நேரக் கட்டணம் 1.5 மடங்கு; புதிய கட்டணத்தை அமல்படுத்த ஓட்டுநர்களுக்கு 6 மாதங்கள் அவகாசம் – தமிழக அரசு அறிவிப்பு
சென்னை – அக்டோபர் 28: தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கான கட்டணத்தை மறுநிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, குறைந்தபட்சக் கட்டணம் ரூ.50 ஆகவும், முதல் 1.8 கிலோமீட்டருக்குப் பிறகு ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.25 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில், கடந்த ஜூலை 9-ஆம் தேதி ஆட்டோ ரிக்ஷா சங்கங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, ஆட்டோ கட்டணத்தை மறுநிர்ணயம் செய்வதற்காக அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது.
ஆட்டோ உரிமையாளர்கள், ஓட்டுநர் சங்கங்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளின் கருத்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்தக் குழு பரிந்துரைகளை வழங்கியது. அதன் அடிப்படையில் புதிய கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அரசு வெளியிட்டுள்ள கட்டண விவரங்களின்படி, தமிழ்நாடு முழுவதும் குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் ரூ.50 ஆகும். இந்தக் கட்டணத்தில் 1.8 கிலோமீட்டர் வரை பயணம் செய்யலாம். அதற்குப் பிறகு ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும்.
காத்திருப்புக் கட்டணமாக நிமிடத்திற்கு ரூ.1 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வழக்கமான கட்டணத்தின் 1.5 மடங்கு வசூலிக்கலாம். மலைப்பாதைகளில் பயணிக்கும்போது வழக்கமான கட்டணத்தின் 1.2 மடங்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண முறைக்கு ஏற்ப ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தங்களது கட்டணமானிகளை ஆறு மாதங்களுக்குள் மறுசீரமைத்துக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுவரை போக்குவரத்துத் துறை இணையதளத்தில் உள்ள கட்டண அட்டையைப் பதிவிறக்கம் செய்து, பொதுமக்கள் பார்வைக்கு வாகனத்தில் வைத்திருக்க வேண்டும். ஆட்டோவில் வைக்கப்பட்டுள்ள கட்டண அட்டையின் உண்மைத்தன்மையை அதிலுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமும் சரிபார்க்கலாம். மேலும், போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் கட்டண அட்டையைப் பார்வையிடலாம்.
ஆட்டோ ஓட்டுநர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால், பொதுமக்கள் 1800 425 5430 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனப் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.
புதிய கட்டண அறிவிப்பு மூலம் ஆட்டோ பயணக் கட்டணத்தில் தெளிவான நடைமுறை உருவாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பொதுமக்கள் கட்டண அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையைச் சரிபார்த்துப் பயணிக்கலாம்.
தமிழக வெற்றிக்குரல்