பட்டாபிராம் அன்னை வேளாங்கண்ணி மாதா சிலையில் எண்ணெய் கசிவு! ஆலயத்தில் குவியும் பக்தர்கள்!

ஆவடி: ஆவடி அருகே பட்டாபிராமில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த மாதா சிலையின் முகம் மற்றும் உடல் பகுதியில் எண்ணெய் போன்ற திரவம் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் ஆலயத்தில் குவிந்து ஜெபம் செய்து வருகின்றனர்.

மாதா சிலையில் எண்ணெய் போன்ற திரவம்

பட்டாபிராமில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வழிபட்டு வருகின்றனர். கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அக்டோபர் மாதத்தை ஜெபமாலை மாதமாக அனுசரிப்பது வழக்கம். இதையொட்டி, மாதா சிலையை வீடு வீடாக எடுத்துச் சென்று ஜெப வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ஆலயத்தைச் சேர்ந்த பால்ராஜ்–ஷாலினி தம்பதியினரின் வீட்டிற்கு அன்னை மரியாவின் சிலை எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது சிலையின் முகம் மற்றும் உடல் பகுதியில் சிறிய துளிகளாகத் திரவம் வடிவதைக் கண்ட குடும்பத்தினர், துணியால் துடைத்துள்ளனர். பின்னர் அது எண்ணெய் போன்ற திரவம் என்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆலய அன்பியத் தலைவர் மற்றும் அருட்தந்தையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தச் செய்தி பரவியதைத் தொடர்ந்து, ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் அங்கு வந்து ஜெபத்தில் ஈடுபட்டனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் சிலை ஆலயத்திற்கு மாற்றம்

வீட்டில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததாலும், அது வாடகை வீடாக இருந்ததாலும், மாதா சிலை ஆலயத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது ஆலயத்தில் தொடர்ந்து ஜெபங்கள் நடைபெற்று வருகின்றன.

அதிகாரப்பூர்வ அங்கீகாரத்திற்குப் பிறகே உறுதிப்படுத்தப்படும்

இதுகுறித்து ஆலயப் பேராயர் மனுவேல் கூறுகையில், இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை மயிலை உயர் மறைமாவட்டப் பேராயரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதுபோன்ற நிகழ்வுகள் பல்வேறு இடங்களில் நிகழ்ந்தாலும், உயர் மறைமாவட்டத்தின் ஆய்வு மற்றும் திருச்சபையின் முறையான அங்கீகாரம் கிடைத்த பின்னரே அவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

எனவே, அதுவரை பக்தர்கள் அமைதியுடனும் பொறுமையுடனும் ஜெபத்தில் ஈடுபடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply