ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு ஐடி துறையில் வேலைவாய்ப்பு பயிற்சி!
சென்னை – அக்டோபர் 30: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், தமிழக அரசின் “வெற்றிப்படி” திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதித்துறை சார்ந்த பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக தகவல் தொடர்புத் தொழில்நுட்பக் கழகத்துடன் (ICT Academy) இணைந்து பயிற்சிகள் நடத்தப்பட உள்ளதாக ஆதிதிராவிடர் நல இயக்குநர் டாக்டர் கி. செந்தில் ராஜ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் இளநிலை மென்பொருள் உருவாக்குநர் (Junior Software Developer), இணையதள உருவாக்குநர் (Web Developer), பயன்பாட்டு மென்பொருள் உருவாக்குநர் (Application Developer) ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்கண்ட மூன்று பயிற்சிகளுடன் மேலாண்மைத் தகவல் அமைப்பு தரவுப் பகுப்பாய்வாளர் (MIS Data Analyst), நுண்நிதி நிர்வாக அலுவலர் (Microfinance Executive), காப்பீட்டு முகவர் (Insurance Agent) ஆகிய பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.
மதுரை மாவட்டத்தில் MIS Data Analyst, மென்பொருள் வடிவமைப்பாளர் (Software Programmer), நுண்நிதி நிர்வாக அலுவலர் மற்றும் காப்பீட்டு முகவர் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இப்பயிற்சியில் சேர விரும்புவோர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
மென்பொருள் சார்ந்த பயிற்சிகளில் சேர விரும்புவோர் இளங்கலைப் பொறியியல் அல்லது பி.எஸ்சி. கணினி அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிதித்துறை சார்ந்த பயிற்சிகளுக்கு இளங்கலை வணிகவியல் அல்லது இளங்கலை வணிக நிர்வாகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சிக்குப் பிறகு வேலைவாய்ப்பு வாய்ப்பு!
பயிற்சியை முழுமையாக நிறைவு செய்யும் இளைஞர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் தகுதியான நபர்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களில் இந்தப் பயிற்சிகள் நடைபெற உள்ளன.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnadw.tn.gov.in என்ற முகவரியில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என ஆதிதிராவிடர் நல இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஐடி மற்றும் நிதித்துறைகளில் திறன் வளர்த்து வேலைவாய்ப்பைப் பெற விரும்பும் தகுதியுள்ள இளைஞர்களுக்கு இந்தத் திட்டம் பயனுள்ள வாய்ப்பாக அமையும்.
தமிழக வெற்றிக்குரல்