பெற்றோர் இல்லாத குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய ‘மை தருமபுரி’ அமைப்பினர்!
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் ஏழ்மையில் உள்ள குழந்தைகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி, ‘மை தருமபுரி’ அமைப்பினர் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, காரிமங்கலம் பகுதியில் பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு தீபாவளி மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அன்பு சில்க்ஸ் துணிக்கடையில், கலாம் சிறகுகள் அறக்கட்டளையுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை ‘மை தருமபுரி’ அமைப்பினர் ஏற்பாடு செய்தனர்.
குழந்தைகளின் விருப்பப்படி புத்தாடைகள் தேர்வு
நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த புத்தாடைகளைத் தாங்களே தேர்வு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ப புத்தாடைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, தர்ஷன் ரெஸ்டாரன்ட்டில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. புத்தாடைகள் அணிந்து, ஒன்றாக அமர்ந்து உணவருந்திய குழந்தைகள் மகிழ்ச்சியுடன் தீபாவளியைக் கொண்டாடினர்.
தன்னார்வலர்கள் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அன்பு சில்க்ஸ் உரிமையாளர் அன்பு கலந்து கொண்டார். ‘மை தருமபுரி’ அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ்குமார் ராஜா, அமைப்பாளர்கள் சண்முகம், கணேஷ், காரிமங்கலம் சதீஸ், கலாம் சிறகுகள் அறக்கட்டளையைச் சேர்ந்த கரண் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்று குழந்தைகளை ஒருங்கிணைத்து புத்தாடைகளை வழங்கினர்.
மேலும், குழந்தைகளுக்குத் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். பெற்றோர் இல்லாத குழந்தைகளுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட இந்த நிகழ்வு, தீபாவளிப் பண்டிகையின் அன்பையும் பகிர்வையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
தமிழக வெற்றிக்குரல்