குழந்தைகள் வரும் வரை காத்திருந்த அமைச்சர் தென்னரசு!

சிறுவர்களுடன் இணைந்து அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார் – குழந்தையின் கழுத்திலிருந்த தவெக துண்டை அகற்றிய செயல் கவனம் ஈர்ப்பு!

பூந்தமல்லி – அக்டோபர் 31:

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கெருகம்பாக்கம் ஊராட்சியில் புதிதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடத்தை, குழந்தைகள் வரும் வரை காத்திருந்து அவர்களுடன் இணைந்து அமைச்சர் தென்னரசு திறந்து வைத்த சம்பவம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கெருகம்பாக்கம் ஊராட்சியில் குழந்தைகளின் பயன்பாட்டிற்காகப் புதிதாக அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தென்னரசு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்து பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தார்.

திறப்பு விழாவின்போது, அங்கன்வாடி மையம் குழந்தைகளுக்கானது என்பதால், அவர்கள் வந்த பிறகே கட்டிடத்தைத் திறக்க வேண்டும் எனக் கருதிய அமைச்சர் தென்னரசு, குழந்தைகள் வரும் வரை காத்திருந்தார். பின்னர் அங்கு வந்த குழந்தைகளை அன்புடன் வரவேற்று, அவர்களில் சிலரைத் தூக்கி வைத்துக்கொண்டு, சிறுவர்களுடன் இணைந்து புதிய அங்கன்வாடி கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

இதனிடையே, நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சில சிறுவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சித் துண்டுகளை கழுத்தில் அணிந்திருந்தனர். இதைக் கவனித்த அமைச்சர் தென்னரசு, குழந்தைகள் கட்சி அடையாளங்களைக் கொண்ட துண்டுகளை அணியக்கூடாது என்று கூறியதுடன், சிறுவன் ஒருவரின் கழுத்தில் இருந்த தவெக கட்சித் துண்டை அகற்றினார்.

குழந்தைகளை அரசியல் கட்சி அடையாளங்களிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்ற நோக்கில் அமைச்சர் மேற்கொண்டதாகக் கூறப்படும் இந்தச் செயல், அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குழந்தைகள் வரும் வரை காத்திருந்து அவர்களுடன் இணைந்து அங்கன்வாடி கட்டிடத்தைத் திறந்து வைத்ததுடன், சிறுவனின் கழுத்திலிருந்த கட்சித் துண்டையும் அகற்றிய அமைச்சர் தென்னரசுவின் செயல், நிகழ்ச்சியில் கவனம் பெற்றது.

செய்தியாளர்: மதன்ராஜ் – பூந்தமல்லி.

Leave a Reply