செவிலியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 12ஆம் தேதி மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் முடிவு!

மதுரை: தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், அக்டோபர் 31ஆம் தேதி மதுரை மாவட்ட அரசு ஊழியர் சங்கக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் கு. சசிகலா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், செவிலியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

அரசுத் துறை சுற்றறிக்கைக்குக் கண்டனம்

அரசு ஊழியர்கள் சமூக ஊடகங்கள், அச்சு ஊடகங்கள், செய்தி ஊடகங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களில் மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகள், திட்டங்கள், நடவடிக்கைகளை விமர்சிக்கக் கூடாது என்றும், அரசை விமர்சிக்கும் தீர்மானங்கள் அல்லது உரைகள் இடம்பெறும் கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு மாநில செயற்குழு கண்டனம் தெரிவித்தது.

மேலும், அந்தச் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செவிலியர்களின் முக்கியக் கோரிக்கைகள்

கூட்டத்தில் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

  • தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 6,500 செவிலியர்களையும், நிரந்தர செவிலியர்களுக்கு வழங்கப்படும் முழுமையான காலமுறை ஊதியத்துடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
  • தற்காலிக ஒப்பந்த முறையில் பணியாற்றும் அனைத்து செவிலியர்களையும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
  • புதிதாக உருவாக்கப்படும் செவிலியர் பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.
  • அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு செவிலியர் கல்லூரிகளில் செவிலியர்கள், செவிலியப் போதகர்களை நிரந்தர அடிப்படையில் பணியமர்த்த வேண்டும்.

நவம்பர் மாதத்தில் பிரச்சார இயக்கம், ஆர்ப்பாட்டம்

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பர் 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் செவிலியர்களைச் சந்தித்து பிரச்சார இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனுடன் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து, கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் நடவடிக்கையையும் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், நவம்பர் 12ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஜனவரி 7ஆம் தேதி பிரதிநிதித்துவப் பேரவை

சங்கத்தின் மாநிலப் பிரதிநிதித்துவப் பேரவையை 2027ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி கன்னியாகுமரியில் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் இரா. தமிழ், மாவட்டப் பொருளாளர் ஆ. பரமசிவன், தமிழ்நாடு நகராட்சி மற்றும் மாநகராட்சி சுகாதார செவிலியர் சங்க மாநிலத் தலைவர் மு. பஞ்சவர்ணம், தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்புநர் சங்க மாவட்டப் பொருளாளர் ஜெ. சிவகுரும்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் நே. சுபின் கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்களை முன்மொழிந்தார். மாநிலப் பொருளாளர் ச. ஹேமச்சந்திரன் நன்றியுரை வழங்கினார்.

Leave a Reply