ரூ.10 மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தில் குழப்பம்! ராணிப்பேட்டை மாவட்டத்தில் 73 டாஸ்மாக் கடைகள் திடீர் அடைப்பு!
ராணிப்பேட்டை, நவ. 2: காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு ரூ.10 வழங்கும் திட்டத்தில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் நேற்று திடீரென அடைக்கப்பட்டன. இதனால் மதுபாட்டில்கள் வாங்குவதற்காகக் கடைகளுக்கு வந்த ஏராளமான மதுப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
காலி மதுபாட்டில்களுக்கு ரூ.10 திரும்ப வழங்கும் திட்டம்
டாஸ்மாக் கடைகளில் மது வாங்கும்போது, ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. பின்னர் காலி மதுபாட்டில்களைத் திரும்ப ஒப்படைக்கும்போது, கூடுதலாக வசூலிக்கப்பட்ட அந்த ரூ.10-ஐ வாடிக்கையாளர்களிடம் திருப்பி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதால், வாடிக்கையாளர்களுக்குப் பணத்தைத் திருப்பி வழங்குவதற்குத் தேவையான ரூ.10 நாணயங்கள் மற்றும் சில்லறைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், மதுபாட்டில்களில் உள்ள ஒட்டுவில்லைகளை இருமுறை வருடி சரிபார்க்க வேண்டிய நடைமுறை இருப்பதால், பணியாளர்களுக்குக் கூடுதல் பணிச்சுமையும் பல்வேறு செயல்பாட்டுச் சிக்கல்களும் ஏற்பட்டுள்ளன.
பழைய பாட்டில்களைக் கொண்டுவந்தவர்களாலும் சிக்கல்
இதற்கிடையே, சிலர் ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த பழைய மதுபாட்டில்களைக் கொண்டுவந்து, அவற்றைத் திரும்ப ஒப்படைத்துப் பணம் வழங்குமாறு கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு சிக்கல்கள் காரணமாக டாஸ்மாக் கடைகளின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டது.
73 கடைகளும் திடீர் அடைப்பு
நேற்று மதியம் 12 மணிக்குத் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள், ஏற்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து மதியம் 1.30 மணியளவில் அடைக்கப்பட்டன. இதனால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சுமார் 73 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நேற்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தைவிட அதிகமான மதுப்பிரியர்கள் கடைகளுக்கு வந்திருந்தனர். ஆனால், கடைகள் திடீரென அடைக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சிலர் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் கிடைக்குமா எனப் பல்வேறு இடங்களில் தேடியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழக வெற்றிக்குரல்