வந்தவாசியில் ஆசிரியர் தின விழா..! நல்லாசிரியர்கள், சாதனையாளர்களுக்கு விருதுகள்!

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கற்க கசடற கல்வி சேவைகள் மற்றும் சமூக நல அமைப்பு சார்பில் ஆசிரியர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் சிறப்பாக பணியாற்றிய நல்லாசிரியர்கள், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் மற்றும் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் சிவப்பிரியா, வந்தவாசி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் உமாதேவி, இந்தோ அமெரிக்கன் கல்லூரி முதல்வர் டாக்டர் எழிலரசி, கீழ்கொடுங்காலூர் சார்பதிவாளர் சுகன்யா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு பாராட்டு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

விழாவிற்கு கற்க கசடற அமைப்பின் நிறுவனத் தலைவர் டாக்டர் இரா. பாஸ்கரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர் குமார், தொழிலதிபர் இஷாக் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் விருது பெற்ற சாதனையாளர்களை வாழ்த்திப் பேசினர்.

நிகழ்ச்சியில் செயலாளர் மனோஜ் குமார் அனைவரையும் வரவேற்றார். கௌரவத் தலைவர் மலர் சாதிக், தனசேகர், சங்க தலைமை நிலைய செயலாளர் டாக்டர் சுரேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், நல்நூலகர் ஜா. தமீம், நல்லாசிரியர் நம்பெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியை கேப்டன் மு. பிரபாகரன் தொகுத்து வழங்கினார். தினேஷ் குமார் ஒருங்கிணைத்தார். டாக்டர் பூவிழி நன்றி கூறினார்.

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும், மாணவர்களின் கல்விச் சாதனைகளையும் கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கல்வியிலும் சமூகத்திலும் சிறந்து விளங்குபவர்களை அடையாளம் கண்டு பாராட்டுவது, மேலும் பல மாணவர்களையும் இளைஞர்களையும் சாதனைப் பாதையில் பயணிக்க ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.

Leave a Reply