செப்.13 வரை மழை..! தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு வாய்ப்பு
சென்னை:
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு தெலங்கானா முதல் மன்னார் வளைகுடா வரையிலான பகுதிகளில் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 7-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற தமிழக மாவட்டங்களிலும் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 8-ஆம் தேதி தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழையும், செப்டம்பர் 9-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 11-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
செப்டம்பர் 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், தமிழகத்தின் பிற பகுதிகளில் சில இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனிடையே, வட தமிழகத்தின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக வெற்றிக்குரல்