தமிழகத்தை ஒட்டிய கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: கேரளாவில் அக்டோபர் 25 வரை கனமழை எச்சரிக்கை!
தாய்லாந்து வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து, மியான்மர் பகுதிகளுக்கு மேலாக வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது. இந்தச் சுழற்சி அக்டோபர் 21ஆம் தேதி வடக்கு அந்தமான் கடல் பகுதிக்குள் நுழைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இது மேற்கு–வடமேற்கு திசையில் நகரக்கூடும்.
இதன் தாக்கத்தால் அக்டோபர் 23ஆம் தேதியளவில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய–கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தொடர்ந்து இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த மூன்று நாட்களில் மேலும் வலுப்பெறக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் அக்டோபர் 25 வரை மழைக்கு வாய்ப்பு
2026 அக்டோபர் 21 முதல் 25ஆம் தேதி வரை கேரளாவில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 21, 22, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சில இடங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும். அக்டோபர் 21 முதல் 25ஆம் தேதி வரை பல்வேறு நாட்களில் சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை; பலத்த காற்று வீசும்
அக்டோபர் 21 முதல் 23ஆம் தேதி வரை சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
அக்டோபர் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடிய காலங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழக வெற்றிக்குரல்