இரும்பு உருக்கு ஆலையால் பாதிப்பா? சட்டப்பேரவையில் முனிரத்தினம் வலியுறுத்தல்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டத்திற்குட்பட்ட களியாம்பூண்டி ஊராட்சியில் செயல்பட்டு வரும் தனியார் இரும்பு உருக்கு ஆலையால் பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

களியாம்பூண்டி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த தனியார் நிறுவனம் தொடர்பாக, ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மேல்பாக்கம் ஏரியில் திறந்துவிடப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும், ஆலை 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதால் ஏற்படும் கழிவுகள் மற்றும் கழிவுநீரால் இளநகர், அனுமந்தண்டலம், களியாம்பூண்டி, மேல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை கால்நடைகள் அருந்துவதால் அவற்றின் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சட்டப்பேரவையில் முனிரத்தினம் கோரிக்கை

பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம், இந்த விவகாரத்தை சட்டப்பேரவையில் எடுத்துரைத்து, சம்பந்தப்பட்ட இரும்பு உருக்கு ஆலையை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்பது அப்பகுதி மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply