25-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா: ஏ.ரெட்டிபட்டியில் கோலாகலமாக நடந்த விநாயகர் சிலை ஊர்வலம்!
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே மத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாணிப்பட்டி ஊராட்சி ஏ.ரெட்டிபட்டி கிராமத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற 25-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, விநாயகர் சிலை ஊர்வலம் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை, விழாவின் 6-ஆம் நாளான இன்று கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
இந்து முன்னணி நிர்வாகிகள் முன்னிலையில் ஊர்வலம்
இந்து முன்னணி கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் கலைகோபி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. வல்லரசு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஊர்வலத்திற்கு, மத்தூர் ஒன்றிய செயலாளர் எம். அஜித் தலைமை வகித்தார்.
இதில் இந்து முன்னணி நிர்வாகிகள், இளைஞர்கள், கிராம மக்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேளதாளங்களுடன் உற்சாக கொண்டாட்டம்
விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் கோஷங்களை எழுப்பியபடி உற்சாகமாக பங்கேற்றனர். இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆட்டம், பாட்டத்துடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இதனால் ஏ.ரெட்டிபட்டி கிராமத்தின் முக்கிய வீதிகளில் விழாக்கோலம் காணப்பட்டது.
இருமத்தூர் ஆற்றில் சிலை கரைப்பு
தொடர்ந்து அம்மன்கோவில் பதி நான்கு ரோட்டில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, இருமத்தூர் ஆற்றில் பக்தர்களால் கரைக்கப்பட்டது.
25-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நடைபெற்ற சிலை ஊர்வலம் கிராம மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
தமிழக வெற்றிக்குரல்