“நாளை பத்திரப்பதிவு அலுவலகங்களில் என்ன நடக்கிறது?”“ஆவணி கடைசி முகூர்த்தம் – 300 வரை கூடுதல் பதிவு வில்லைகள்; பதிவுத்துறை சிறப்பு ஏற்பாடு!”

சென்னை – செப்டம்பர் 16: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் கடைசி முகூர்த்த தினமான செப்டம்பர் 17-ம் தேதி, அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

சுபமுகூர்த்தம் மற்றும் விசேஷ தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறுவது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு, ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த தினமான 17.09.2026 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால், பொதுமக்களின் நலன் கருதி கூடுதல் பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்ய பதிவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, 17.09.2026 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் 100 பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 50 பதிவு வில்லைகள் என மொத்தம் 150 பதிவு வில்லைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு வழக்கமான 200 பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 100 பதிவு வில்லைகள் என மொத்தம் 300 பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழக்கமான 100 பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 50 சாதாரண பதிவு வில்லைகள் அல்லது ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகள் என கூடுதல் பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த தினமான 17.09.2026 அன்று பத்திரப்பதிவு மேற்கொள்ள வரும் பொதுமக்கள் அதிக நேரம் காத்திருப்பதை தவிர்த்து, சீரான முறையில் தங்களது ஆவணங்களை பதிவு செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் ஒரே நாளில் பத்திரப்பதிவு மேற்கொள்ள வரக்கூடும் என்பதால், பதிவுத்துறையின் சார்பில் முன்கூட்டியே கூடுதல் பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது பத்திரப்பதிவு பணிகளை சீராக மேற்கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கடைசி முகூர்த்த தினத்தை முன்னிட்டு அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் பதிவு வசதிகளை ஏற்படுத்தியுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் முகூர்த்த நாளில் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைத்து, பணிகளை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply