ஆலப்பாக்கம் முத்துமாரியம்மன் ஆலய திருப்பணிக்கு ரூ.1 லட்சம் நிதி: தவெக மாவட்ட செயலாளர் சக்திவேல் வழங்கினார்!
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் ஆலயத்தின் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயில் கட்டுமானப் பணிகளை முழுமையாக நிறைவு செய்ய நிதியுதவி கோரி கிராம மக்கள் தமிழக வெற்றிக் கழகத்தினரை அணுகியிருந்தனர்.
இதையடுத்து, விழுப்புரம் வடகிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ரூ.1 லட்சம் நிதி ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகி வெங்கடேசன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் முத்துராஜ் மற்றும் வினோத் முன்னிலையில் நிதி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு விழுப்புரம் வடகிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கி, ரூ.1 லட்சத்திற்கான காசோலையை ஆலப்பாக்கம் கிராம பொதுமக்களிடம் வழங்கினார்.
அப்போது பேசிய சக்திவேல், பொதுமக்கள் தங்களது அனைத்து விதமான கோரிக்கைகளையும் தயக்கமின்றி கட்சி நிர்வாகிகளிடம் தெரிவிக்கலாம் என்றும், மக்களுக்கு சேவை செய்வதற்காகவே தமிழக வெற்றிக் கழகம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், வரும் காலங்களிலும் மக்கள் நலப்பணிகளில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து ஈடுபடும் என அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள், ஒன்றிய மற்றும் கிளைக் கழக பொறுப்பாளர்கள், ஆலப்பாக்கம் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக வெற்றிக்குரல்