ஆலுவா நகரில் அதிர்ச்சி! இளைஞரை தாக்கி தங்கச் சங்கிலி, பணம் பறிப்பு!

ஆலுவா:

கேரள மாநிலம் ஆலுவா நகரின் மையப்பகுதியில் இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் கடுமையாக தாக்கி, தங்கச் சங்கிலி மற்றும் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடநாடு பகுதியைச் சேர்ந்த ஜோஃபின் என்பவர், நேற்று அதிகாலை ஆலுவா ரயில் நிலையத்திற்கு நடந்து சென்றபோது இந்த தாக்குதல் நடந்ததாக புகார் அளித்துள்ளார். கோழிக்கோடு செல்வதற்காக ஆலுவா வங்கி சந்திப்பில் கே.எஸ்.ஆர்.டி.சி. பேருந்தில் இருந்து இறங்கி ரயில் நிலையத்தை நோக்கி சென்றுள்ளார்.

ரயில் நிலையத்திற்கு செல்லும் வழி சரியாக தெரியாததால், கூகுள் மேப் உதவியுடன் குட்ஷெட் பகுதி வழியாக ஜோஃபின் நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்த சிலர் அவரை வழிமறித்து பிடித்து விசாரித்துள்ளனர்.

தொடர்ந்து அந்த கும்பல் அவரை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியதாகவும், தாக்குதலில் நிலைகுலைந்த அவரை அருகிலிருந்த கால்வாயில் வீசியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோஃபினின் கழுத்தில் இருந்த சுமார் 3 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் கையில் இருந்த ரூ.5,000 பணத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. எதிர்த்து போராட முயன்றபோதும், கும்பலாக சேர்ந்து அவரை பிடித்து தாக்கியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த ஜோஃபின் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே பகுதியில் இதற்கு முன்பும் ஒரு குழந்தை காணாமல் போனதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதால், அந்த பகுதியின் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply