ஆம்பூரில் பழைய பொருட்கள் குடோனில் திடீர் தீ – ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்.

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சந்தைப்பேட்டை பள்ளிவாசல் தெருவில் அஸ்கர் கான் என்பவர் நடத்தி வந்த பழைய வீட்டு உபயோகப் பொருட்கள் சேமிப்பு குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

குடோனில் இருந்து அதிகளவில் புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் ஆம்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

குடோனில் பழைய பொருட்கள் அதிகளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததால் தீ வேகமாக பரவியது. சுமார் ஒரு மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பழைய வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதனால் குடோன் உரிமையாளருக்கு கணிசமான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில், வெல்டிங் இயந்திரம் மூலம் பழைய பொருட்களை உடைக்கும் பணியில் ஈடுபட்டபோது தீப்பொறி ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்ட சேதம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply