மலைக்கிராம மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு..! அஞ்செட்டியில் சிறப்பு முகாம்.

கிருஷ்ணகிரி:

அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், அதன் தேசிய அமைப்பான அகில பாரத அதிவக்த பரிஷத் நிறுவன நாளை முன்னிட்டு, தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி பகுதியில் உள்ள தொட்டமஞ்சு வனப்பகுதி மலைக்கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

முகாமில், மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ், நிர்வாகிகள் செல்வி, சித்ரா, மாநில செயற்குழு உறுப்பினர் கோபிகுமார், மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மலைக்கிராமங்களில் நிலவும் முக்கியமான சமூக மற்றும் சட்டப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

குறிப்பாக, குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள், குழந்தைகள், சிறுமிகள் மற்றும் இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விளக்கப்பட்டது. மேலும், மலைக்கிராம மக்கள் சட்ட உதவி தேவைப்படும் நேரங்களில் தங்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

முகாமில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இலவசமாக நோட்டுகள், புத்தகங்கள், பேனாக்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, மஞ்சி மாரியம்மன் கோவில் குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. முகாமிற்கான ஏற்பாடுகளை அஞ்செட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Leave a Reply