நன்றாக இருந்த சாக்கடை பாலம் உடைப்பு! 20 நாட்களாக சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் அவதி – பள்ளி வேன், ஆட்டோக்கள் செல்ல முடியாத நிலை.

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ராஜீவ்நகர் பாலாஜி தெருவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாக்கடை பாலம் உடைக்கப்பட்டு 20 நாட்களுக்கும் மேலாகியும் சீரமைக்கப்படாததால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ராஜீவ்நகர் பாலாஜி தெருவில் பொதுமக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த சாக்கடை பாலம் நல்ல நிலையில் இருந்ததாகவும், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பாலம் உடைக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாலம் உடைக்கப்பட்டு 20 நாட்களுக்கும் மேலாகியும் இதுவரை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாலம் சீரமைக்கப்படாததால் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி நிற்பதுடன், பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், இருசக்கர மற்றும் பிற வாகனங்கள் செல்வதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் பள்ளி வேன்கள் மற்றும் ஆட்டோக்கள் அப்பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சாக்கடை திறந்த நிலையில் இருப்பதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகும் சூழலும் உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, உடைக்கப்பட்ட சாக்கடை பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும். மேலும், கழிவுநீர் தேங்காத வகையில் உரிய வடிகால் வசதியை ஏற்படுத்தி, சுகாதார சீர்கேடு மற்றும் நோய் பரவும் அபாயத்தைத் தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply