“என் குப்பை – என் பொறுப்பு!” ஆவடி கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய விழிப்புணர்வு.

ஆவடி:

ஆவடி மாநகராட்சி சார்பில் தூய்மை பாரத இயக்கம்–2.0 திட்டத்தின் கீழ், பட்டாபிராம் இந்து கல்லூரியில் முதலாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவர்களுக்கான திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமில் மாணவர்களுக்கு கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரிப்பதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. மேலும், நான்கு வண்ணக் குப்பைத் தொட்டிகளின் பயன்பாடு, மக்கும் மற்றும் மக்காத கழிவுகளை தனித்தனியாக வழங்கும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கழிவுகளை மறுசுழற்சி செய்வது மற்றும் மறுபயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதேபோல், பொது இடங்களில் குப்பைகளை வீசாமல் அவற்றை தூய்மையாக பராமரிப்பதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.

“என் குப்பை – என் பொறுப்பு”

மாணவர்களிடையே “என் குப்பை – என் பொறுப்பு” என்ற பொறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முகாம் அமைந்திருந்தது.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும், தூய்மையான நகரை உருவாக்குவதிலும் ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கிய பங்கு இருப்பதாக மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. வீடுகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் தூய்மையை கடைப்பிடிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்த முடியும் என்றும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

அதிகாரிகள், கல்லூரி நிர்வாகிகள் பங்கேற்பு

இந்நிகழ்வில் இந்து கல்லூரி இயக்குநர் டாக்டர் ராஜேந்திர நாயுடு, வணிகவியல் துறைத் தலைவர் பார்த்திபன், கல்லூரி அலுமினி துணைச் செயலாளர் சடகோபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்விற்கு ஆவடி மாநகராட்சி துணை ஆணையர் டிட்டோ தலைமை வகித்தார்.

மேலும், சுகாதார அலுவலர்கள் மொஹிதீன் மற்றும் குமார், சுகாதார ஆய்வாளர்கள் வித்யா, கல்யாண், பாலமுருகன், ஷீபா, SBM திட்ட ஒருங்கிணைப்பாளர், SBM பரப்புரையாளர்கள் மற்றும் DBC பணியாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினர்.

தூய்மையான ஆவடி மாநகராட்சியை உருவாக்குவதில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாம் பயனுள்ள வகையில் நிறைவடைந்தது.

Leave a Reply