ஆவடி அருகே பட்டாபிராம் தண்டரை பகுதியில் 200-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்!
பட்டாபிராம்: சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த பட்டாபிராம் தண்டரை மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புக் கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.
போக்குவரத்து நெரிசல் – பொதுமக்கள் அவதி
பட்டாபிராம் தண்டரை மேம்பாலத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள் கொட்டகைகள் அமைத்து கடைகள் நடத்தி வந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கும் இடையூறு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்குப் பல்வேறு புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்
இதையடுத்து, இன்று நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் மற்றும் இளநிலைப் பொறியாளர் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது, நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதன் மூலம் மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றப்பட்டன. எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் மார்க்கெட் பகுதியில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக வெற்றிக்குரல்