ஆவடி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்: காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்.
ஆவடி, செப். 22:
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டாபிராம் அருகே தண்டுரை பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்டுரை பகுதியில் குடிநீர் விநியோகம் சீராக நடைபெறவில்லை என்றும், நீண்ட நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக குடிநீர் பெறுவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும், இதனால் அந்த தண்ணீரை குடிப்பதற்கும் அன்றாட பயன்பாட்டிற்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் பட்டாபிராம்–பூந்தமல்லி சாலையில் திரண்டனர். சாலையில் மரத்துண்டுகளை போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், சீரான மற்றும் தூய்மையான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக வெற்றிக்குரல்