633 ஆண்டுகளுக்கு முன் ஏரி அமைத்த வரலாறு..! பர்கூர் அருகே விஜயநகர கால கல்வெட்டு கண்டெடுப்பு
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே குட்லட்டி கிராமத்தில், சுமார் 633 ஆண்டுகளுக்கு முந்தைய விஜயநகர காலத்தைச் சேர்ந்த அரிய கல்வெட்டு வரலாற்று ஆர்வலர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு அக்காலத்தில் ஏரி அமைக்கப்பட்டதும், அதன் பராமரிப்புக்காக நிலம் மற்றும் எண்ணெய் ஆட்டும் செக்கு உள்ளிட்டவை தானமாக வழங்கப்பட்டதையும் பதிவு செய்துள்ளது.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் சங்கம், தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து குட்லட்டி கிராமத்தில் மேற்கொண்ட ஆய்வின்போது, வரதப்பன் என்பவரது நிலத்தில் இந்தக் கல்வெட்டு கண்டறியப்பட்டு படியெடுத்து ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வாளர்களின் தகவல்படி, விஜயநகரப் பேரரசை இரண்டாம் தேவராயன் ஆட்சி செய்த காலகட்டத்தில், அவரது மகன் இம்மடி புக்கராயன் இந்தப் பகுதியை உள்ளடக்கிய முள்வாய் ராஜ்யத்தின் ஆளுநராக இருந்துள்ளார். குட்லட்டியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஸ்ரீமுக ஆண்டில், அதாவது கி.பி. 1393-ஆம் ஆண்டுக்கு இணையான காலத்தில் பொறிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த காலகட்டத்தில் மகாராஜகடை, குருவிநாயனப்பள்ளி, காரகுப்பம், மேகலசின்னம்பள்ளி, வரட்டனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகள் இந்த நிர்வாகப் பிரிவுக்குள் இருந்ததாக கல்வெட்டு ஆய்வில் தெரியவந்துள்ளது.
அப்பகுதியை நாயக்கமாக நிர்வகித்து வந்த கேசையப்பா என்பவரின் காலத்தில், ஈராண்டை என்பவரின் மகன் வையணந்தார் ஏரி ஒன்றை அமைத்து, அதனைப் பாதுகாக்கும் நோக்கில் செல்லப்பிள்ளையார் கோயிலை கட்டியதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும், அந்தக் கோயிலுக்கு 5 குளகம் விதை விளையும் அளவு கொல்லை நிலம், 6 குளகம் விதை விளையும் அளவு கழனி நிலம் மற்றும் எண்ணெய் ஆட்டும் செக்கு ஆகியவை தானமாக வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டின் மற்றொரு முக்கிய சிறப்பு, ‘சாற்றை ஏரி’ என்ற சொல்லாட்சி இடம்பெற்றிருப்பதாகும். ஏரியின் ஒரு பகுதியில் சேறு மற்றும் மூங்கிலை பயன்படுத்தி தடுப்பணை போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதனை மீன்பிடிக்க பயன்படுத்திய முறையை இது குறிக்கிறது. இத்தகைய அமைப்பு கிருஷ்ணகிரி பகுதியிலுள்ள ஏரிகளில் இன்றளவும் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சொல்லாட்சி தமிழகத்தில் முதன்முறையாக இந்த கல்வெட்டிலேயே கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கல்வெட்டில் ‘முக்கை செக்கு’ என்ற சொல்லும் இடம்பெற்றுள்ளது. வழக்கமான இரண்டு கம்புகளுடன், எண்ணெய் ஆட்டுபவர் அமருவதற்காக கூடுதலாக ஒரு பலகை அமைக்கப்பட்ட செக்கு முறையை இது குறிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குட்லட்டி பகுதியில் இருந்த விநாயகர் கற்சிற்பம் தற்போது சாலையோரத்தில் அமைந்துள்ள புதிய கோயிலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த கல்வெட்டு, அக்காலத்தில் நீர்நிலை அமைப்பு, விவசாயம், கோயில் நிர்வாகம் மற்றும் தொழில்முறை நடவடிக்கைகள் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புபட்டிருந்தன என்பதை அறிய முக்கிய வரலாற்று ஆவணமாக அமைந்துள்ளது.
தமிழக வெற்றிக்குரல்