IIT, IIM, NIT உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் BC, MBC மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (BC, MBC/DNC) மாணவ, மாணவிகள் 2026-27-ம் கல்வியாண்டிற்கான புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு (Fresh & Renewal Applications) விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு பயிலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள BC, MBC/DNC மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள்.
அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை
தகுதியுடைய மாணவர்களுக்கு கற்பிப்புக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் மற்றும் இதர கட்டாயக் கட்டணங்கள் அல்லது ஆண்டிற்கு அதிகபட்சமாக ரூ.2.00 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் பெறும் இடங்கள்
மாணவர்கள் கீழ்க்கண்ட இடங்களில் விண்ணப்பங்களைப் பெறலாம்:
- பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், சென்னை-5
- மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், சென்னை-5
- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்
- இணையதளம்: www.bcw.tn.gov.in
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து, மாணவர் பயிலும் கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனம் Bonafide Certificate உடன் விண்ணப்பத்தை பரிந்துரை செய்து, சம்பந்தப்பட்ட நலத்துறைக்கு அனுப்ப வேண்டும்.
முக்கிய கடைசி தேதிகள்
- Renewal விண்ணப்பங்கள்: 31.10.2026-க்குள் அனுப்ப வேண்டும்.
- Fresh விண்ணப்பங்கள்: 30.11.2026-க்குள் அனுப்ப வேண்டும்.
- Even Semester கட்டண ரசீதுகள்: 15.01.2027-க்குள் அனுப்ப வேண்டும்.
மற்ற கல்வி உதவித்தொகை பெறுவோருக்கு தகுதி இல்லை
மத்திய அல்லது மாநில அரசின் பிற கல்வி உதவித்தொகைத் திட்டங்களின் கீழ் ஏற்கனவே பயன் பெறும் மாணவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள மாணவர்கள் கடைசி தேதியை தவறவிடாமல் விண்ணப்பித்து, கல்வி உதவித்தொகையைப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்